Best tamil Article For Students

மகனே! ஏன் மறந்தாயோ உன் தாய் மறந்தாயோ உன் உயிர் மறந்தாயோ ... கருவிலே உனை சுமந்திட்ட போது நான் சுமை மறந்தேன் .மண்ணிலே நீயும் பிறந்திட்ட பிறகு கண் தூக்கம் மறந்தேன் . மடியிலே நீயும் தவழ்ந்திட்ட நேரம் நான் உண்ண மறந்தேன். என் கனவை மறந்தேன் தொலைவை மறந்தே உறவை தொலைத்தேன். உனக்காக தானே நான் எல்லாம் மறந்தேன். நீ என்னை ஏன் மறந்தாயோ .. தள்ளாடும் வயதிலே தடுமாறும் உன் தாய் மறந்தாயோ... அல்லாடும் நேரம் சிறு துணையாக வருவாயா?தடுக்கி நான் விழுந்தால் தூக்கி நீ எடுப்பாயா  இல்லை இனி மறந்தே தான் போவாயா.. பகலெல்லாம் காத்திருந்தேன் கண்ணே ஓர் கதை பேச இரவெல்லாம் விழித்திருந்தேன் மகனே உன் முகம் காண எனை மறந்து போனாயோ இல்லை மறைந்து நின்றாயோ நீ கலங்கி தவித்தாயோ. தாரம் கண்டு தயங்கி
நின்றாயோ  தாமதமாய் வீடு வந்தாயோ ... தாயிடம் பேசிட நீ  யாரிடம் அனுமதி கேட்கின்றாய்
என் உயிரே கலங்காதே  தாயிடம் பேசிட நீ தயங்காதே  தாயின்றி இங்கெவனும் தானாகப் பிறக்கவில்லை. தாரமென கொள்ளவில்லை. எனக்கெனவே நானிருந்த என் மகனை உனக்கெனவே துணையாக நான் தந்து தனியாக நிற்கின்றேன். உயிரென நான் நினைத்திருந்த. என் மகனை பிரிந்தின்று தனியாக வாழ்கின்றேன்.  தொப்புள் கொடி உறவே நீ தாய் மறப்பாயோ?விட்டில் பூச்சி உறவென்று எனை நினைப்பாயோ? மகனே அழுது அழுது என் கண்ணீர்த் துளியெல்லாம் வற்றி போய் விட்டது.ஒரு முறை ஒரே ஒரு முறை வந்து பார்ப்பாயா என்று ஏங்கி வாசலையே பார்த்துக் கொண்டு காத்திருக்கின்றனர் அநாதை இல்லங்களிலே ஆயிரமாயிரம் தாய்மார்கள். பேரப்புள்ள எத்தனன்னு எங்கிட்ட கேகக்குறாங்க சின்ன புள்ள முகத்த நானும் ஒருமுறையாவது பார்ப்பேனா என்ற ஏக்க குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அங்கே தஞ்சம் புகும் தாய்மார்களுக்கெல்லாம் ஏதோ ஒரு ஏக்கம் மனதிற்குள்ளே இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆசைக்கும் ஆஸ்திக்குமாக ஒரே பிள்ளையை பெற்றெடுத்த தாயோ 
இரண்டு பிள்ள பெத்திருந்தா யாரையாச்சும் பார்த்திருப்பேன் .ஒத்த புள்ள பெத்ததால உன்ன காண காத்திருக்கேன் என்று காலம் முழுவதும்  கண்ணீரோடு காதிருக்கின்றாள். அண்மையில் வந்த பத்திரிகைச்செய்தி கல் நெஞ்சையும் கரைய வைப்பதாய் இருந்தது. கன்னியாகுரியிலே ஒரு தாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உயிரோடு இருந்தும் அதுவும் உள்ளூரில் இருந்தும்  பெற்றோர் இறந்து பத்து நாட்களுக்கு பிறகு அதாவது ஊருக்கே தெரிந்த பிறகு தான் மகன்களுக்கு தெரிந்ததாம். ஏன் இப்படியோர்க் கொடுமை  பெற்றோருக்கென்று எண்ணிப்பாருங்கள் என் இதயம் கனத்து போகிறது. உனக்காக தன்னையே மறந்த தாய்  மறந்ததேனோ? உச்சம் தலையினில் கல் சுமந்தாலும் முத்த மழையினில் உனை நனைத்த ததந்தை மறந்தேனோ எண்ணி பார்க்கையில் இதயம் கனத்துப் போகிறது.. எந்த. தாய்க்கும் இனி உன் போல் ஒரு பிள்ளை வேண்டாம்.தாயை மறந்து போன உன் இதயம் ஒரு முறை கூட நினைத்து பார்க்கவில்லையா?ஆயிரம் முறை உன் அலைபேசி ஒலிக்கின்றதே அலைபேசியில்ஒருமுறை கூட நீ அழைத்து பார்க்கவில்லையா?ஏன் இன்று  தன் உதிரத்தை உன் உணவாக்கிய தாய் மறக்கின்றாய். 
கண்மணி நீயிருக்க கருவறை இருந்தெனக்கு உன் வீட்டில் நான் இருக்க ஒரு சிறு அறை கூடவா இல்லை உன் வீட்டில் என்று காலம் முழுதும் கண்ணீர் சிந்தும் தாய்மார்கள் ஒரு புறமிருக்க. வயசுகாலம் சாவாம நம்ம உயிரை எடுக்குதேன்னு ஏசி வீட்டில் இருந்துகிட்டு ஓசி சோறு போடணுமா என்று  புலம்பி கொண்டே தனியறை கட்டி பெற்றோரை தனிமைப் படுத்தி வைக்கின்றனர் இரக்கமில்லா பிள்ளைகள் பலர்.ஏனோ இன்று பிள்ளைகள் பலர் பெற்றோரை சுமையாகவே எண்ணுகின்றனர். மகனே கடைசி பருக்கை உணவைக் கூட நீ மிச்சம் வைக்காமல் உண்ண வேண்டுமென்று கால் கடுக்க நடந்து நடந்து உனக்கு உணவு தந்தேன்.நீயோ இன்று குப்பைத்தொட்டியில் சிந்திக்கிடக்கின்ற எச்சில் பருக்கைகளை எடுத்து சாப்பிடும் அவல நிலைக்கு என்னை ஆளாக்கி விட்டாயே...நீ முந்தானையில் சிந்திய சிறுநீரை கூட சிரித்து கொண்டே துடைத்து விட்டு உன்னை அள்ளி அணைப்பேனே நீயோ கழிவறையையே என் படுக்கையறையாக்கி விட்டாயே.மகனே உன் இல்லத்திற்கு அன்னை இல்லம் என்று பெயர்  வைத்த போது ஆனந்தமடைந்தேன். ஆனால் பெயருக்குத்தான் உன் இல்லம் அன்னை இல்லம் நானிருப்பதோ அநாதை இல்லம் ... ஒரு போதும் நான் உன்னை சபித்து விட மாட்டேன் ஏனென்றால் நீ என் உயிர்.. என் மூச்சில் கலந்து  நிற்கும் என் உயிர். எங்கிருந்தாலும் நீ நன்றாக வாழ வேண்டும்.  என் உயிர் பிரிந்தாலும்  நீ உயர்வாக. வர வேண்டும். மகனே என் இதயத்துடிப்பு அடங்கி போகும் அந்த நொடி வரை உனக்காகவே அது   துடித்துக் கொண்டிருக்கும் உன்னையே அது நினைத்துக் கொண்டிருக்கும்... கடைசியாக ஒருமுறை உன்னை காண ஏங்குகின்றேன்... அவசியம் நீ வந்து செல்ல வேண்டும்... கண் மூடி போகும் முன்னே என் மகனே வருவாயோ.. கைப்பிடித்து ஒருமுறை எனை அழைத்து செல்வாயோ உயிர் பிடித்து  வைக்கின்றேன் உன் முகம் காண துடிக்கின்றேன்.. கண் தூக்கம் மறக்கின்றேன் கண்ணே நான் உனைக்காண தவிக்கின்றேன் ஓடோடி வருவாயா நீ தேடி வருவாயா இல்லை தாய் காண ?மறப்பாயா?

Comments

Popular posts from this blog

தேனினும் இனிய என் தாய்மொழியே கன்னித்தமிழே